கரூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிற்கிடையே காவிரி கரையோரத்தில் அமைந்துள்ளது லாலாப்பேட்டை. பஸ்களில் வந்து இறங்கியதும் பார்த்தால் காவிரியிலிருந்து சில்லென்று வீசும் காற்று ஒரு பக்கம், மறு பக்கம் தென்கரை வாய்க்கால் தண்ணீர் ஆர்பரித்து செல்லும் சத்தம், திரும்பிய பக்கமெல்லாம் பச்சை கம்பளம் போர்த்தியது போல பசுமை நிறைந்து காணப்படும்… இந்த காட்சியை ரசிக்க வார்த்தைகள் இல்லை !
சிம்மசொப்பனமாக விளங்கிய ஊர்:
லாலாப்பேட்டை என்ற ஊர் பெரும்பாலும் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஊர் தான். ஊரின் அறிமுகமே ரயில்வே கேட் தான். ஒரு காலத்தில் ரயில்வே கேட் மூடினால் போதும், இரண்டு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்தவர்களுக்கு இந்த ஊர் எப்படியும் தெரிந்திருக்கும்.
மற்றொரு அடையாளம்..!
லாலாப்பேட்டை என்றால் டக்கென்று நினைவுக்கு வருவது வாழைபழம் தான். ரயில்வே கேட் இருந்த காலம் முதல் இன்று வரை பஸ் வந்து நின்றால் போதும், தூங்குபவர்களை கூட ஒரு குரல் தட்டி எழுப்பும்… அது தான் ரஸ்தாலி, தேன்வாழை பழம் என்ற குரலை கேட்டு இருப்போம். இன்றும் வாழைப்பழங்கள் இங்கு மிகவும் பிரசித்தமானவை….
லாலாப்பேட்டை பெயர் வர காரணம்
முன்பு ஒரு காலத்தில் இந்த ஊரை பேட்டை என்று தான் அழைத்து உள்ளனர். பேட்டை என்றால் மார்க்கெட் என்று பொருள். இந்த பேட்டையில் லாலா மிட்டாய் கடைகள் அதிகம் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளதனால், பேட்டைக்கு போனால் லாலா மிட்டாய் வாங்கலாம் என்பார்களாம். இது தான் காலப்போக்கில் லாலாப்பேட்டை என்று பெயர் வரக் காரணம் என விவரம் அறிந்தவர்கள் மூலம் நமக்கு கிடைத்த தகவலைச் சேர்த்துள்ளோம். இது சரிபார்க்கப்பட்ட தகவல் ஆகும்.
ருசியான வெற்றிலை
லாலாப்பேட்டை பகுதிகளில் காவிரி தண்ணீரில் சாகுபடி ஆகும் வெற்றிலை நல்ல ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்குவார்கள். இப்போதும் காவிரி நீரின் உதவியுடன் வேளாண்மை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதும் உறுதியாகும்.
200 ஆண்டு பள்ளி
ஒரு காலத்தில் கரூர்-குளித்தலை இடையே லாலாப்பேட்டை விட்டால் வேறு எங்கும் பள்ளி கூடங்கள் கிடையாது. லாலாப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள பள்ளி ” 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும்” . இந்த பள்ளி பற்றிய வரலாறு சரிபார்க்கப்பட்டு, அதில் படித்தவர்கள் இன்று பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதும் உண்மையாகும்.
ஆன்மீக பூமி
லாலாப்பேட்டை ஒரு ஆன்மீக பூமியாகும். வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பு இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ளது, அது தான் சுற்றும் கல். ராமாயணத்தில் லட்சுமணன் காயம் அடைந்த போது மூலிகை கொண்டு வர சென்ற ஆஞ்சநேயர், சஞ்சீவிராயன் மலையை அப்படியே தூக்கி கொண்டு சென்ற போது அதிலிருந்து ஒரு சிறிய பாகம் விழுந்ததாகவும், அது தான் இந்த சக்தி வாய்ந்த கல் என்று கூறப்படுகிறது. இந்த கல்லில் நாம் வேண்டுதலை நினைத்து உட்கார்ந்தால் கல் வலது பக்கமாக சுற்றும். வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது இதற்கான விசித்திரமான நம்பிக்கையாகும்.
இப்படி ஒவ்வொரு வகையிலும் லாலாப்பேட்டை என்ற ஊர் சிறப்பை பெற்றுள்ளது.
இதுபோன்ற சிறப்புமிக்க சொந்த ஊரின் பெருமைகளை எங்கள் தளத்தில் பகிர்ந்து உலகறிய செய்யுங்கள் வாசகர்களே….!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.