குமரனின் எச்சரிக்கை…
குமரனின் நாய் மணி, அசுரனின் வேலையாள் அல்லக்கையை நோக்கி பாய்ந்து அவனை கவ்விக்கொண்டது. அல்லக்கை தப்பிக்க முயன்றான். ஆனால், அவனால் முடியவில்லை… குமரன் வேகமாக அவ்விடம் சென்று, அல்லக்கையின் கழுத்தை பிடித்து, “இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்டான்…?” பயந்து போன அல்லக்கை தன்னை நிரபராதி என்று காட்ட முயன்றான்…

இதற்கிடையே, பாரிஜாதம் மற்றும் குமரனின் செல்ல ஆடு ராஜா, ஆகியோர் அந்த இடத்தை அடைந்தனர். குமரன் பாரிஜாதத்திடம், அல்லக்கை உற்றுநோக்கி இருக்கிறான் என்று சொன்னான்! இதை கேட்ட பாரிஜாதம் அல்லக்கையை கடுமையாக திட்டினாலும்; அசுரனுடன் குமரனுக்கு தேவையில்லாமல் பிரச்சனை வரக்கூடும் என்பதால் அவனை விடுவிக்க சொன்னாள். முதலில் மறுத்த குமரன் பின்னர் பாரிஜாதத்தின் தொடர்ந்த வற்புறுத்தலால், இறுதியில் ஒப்புக் கொண்டு அல்லக்கையை இருமுறை அறைந்து விட்டு இனிமேல் இந்த மாதிரியான தவறுகளை செய்ய வேண்டாம்..! என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்து அல்லக்கையை விடுவித்தான்…
குதிரை வியாபாரியின் பெருமை பீத்தல்…
இந்த நேரத்தில், குதிரை வியாபாரி ஊர் சத்திரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். தன் கம்பீரமான குதிரைகளை அடிக்கடி பார்த்து அவன் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவன் உதவியாளர்களில் ஒருவன், மக்கள் மத்தியில் அவன் தந்த வாக்குறுதியை நினைவூட்டினான் ! அவனை அலட்சியமாக பார்த்த குதிரை வியாபாரி, “ஆமாண்டா, ஏன் செல்லகுதிரையை அடக்கினால்? அடக்கறவனுக்கு, இனாமாக தருவேன்னு சொன்னேன் தான்…! ஆனா இவன அடக்க எவன் இருக்கான் அதுக்கு இனிமே எவனாவது பொறந்து தான் வரணும்…

கந்தனின் அறிவுரை
“குமரா, நீ பிறந்ததே அழகூருக்கு நன்மை செய்யனு, நான் நினைச்சது சரியா போச்சு அப்பா..!” என கந்தன் தன வீட்டிற்கு வந்த குமரனிடம் நெகிழ்ச்சியுடன் சொன்னார். உனக்கு ‘பத்மேஸ்வரர், ஞானசித்தர் மற்றும் உன் பாட்டன் மற்றும் தகப்பனோட பூரண ஆசிகள் இருக்கு’ எனக்கு அது போதும் என்றார். குமரன் அவர் தன் மேல் வைத்துள்ள பாசத்தை கண்டு நெகிழ்ந்தான். “ஆசானே அதோட உங்க ஆசியும் ரொம்ப முக்கியம்…!” என்றான். அவனுடைய அடக்கத்தை கந்தன் ரசித்தார்.
“ஆனா, குமரா நீ எச்சரிக்கையா இருக்கனும் குதிரை ஏற உடல் பலம் மட்டுமில்ல; மனோபலமும் வேணும்..! உன் அப்பன் தான் என் உயிர் நண்பன் வீரனை போல ஒரு குதிரை வீரனை நீ பாக்கமுடியாது. அவன் கிட்ட பஞ்சகல்யாணி குதிரை எல்லாம் மண்டி போடும். அவன் குதிரைல ஏறி வர அழகை பாக்கவே பொண்ணுங்களாம் கூடி நிப்பாங்கா..! ஹ்ம்ம்” என்று பழைய நினைவுகளில் மூழ்கி பெருமூச்செறிந்தார். குமரன் தன தந்தையின் வீரத்தை நினைத்து பெருமிதம் கொண்டான்.
நண்பர்கள் சந்திப்பு…
குதிரை சவாரி போட்டியைப் ஆசானிடம் பேசிய பிறகு, குமரன் தன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான். இருள் மூழ்கியிருந்தது. அவன் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு, திடீரென ஒரு வலுவான கை அவனைத் திடுக்கிடும் விதமாக பிடித்தது…

அதன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான். ஆனால், அது முன்னிலும் அதிக பலத்துடன் இறுகியது. அந்த மர்ம மனிதன் முகத்தில் ஒரு குத்து விட முடிவுசெய்தான். ஆனால், குத்துவதற்கு முன் அந்த ஆள் பிடியை தளர்த்தி, குமரனை கட்டிப்பிடித்தான்…
அது, அவன் நெருங்கிய நண்பன் கருப்பன். குமரன் மகிழ்ச்சியுடன் அவனை கட்டிப்பிடித்து, “எவ்வளவு நாளாச்சு கருப்பா உன்ன பாத்து?” என்று கூறி அணைத்துக்கொண்டான். கருப்பன் தனது பயணம் பற்றி குமாரனிடம் சுருக்கமாக கூறி, “நானும் உன்னை காணாது தவிச்சி போய்ட்டேன். இந்த ஆறு மாசம் எத்தனையோ புது அனுபவம்…” என்று கூறினான். குமரன், “நானும் உன்னிடம் பகிர வேண்டிய முக்கிய விஷயங்கள் பல உள்ளன..!” என்றான்.
கருப்பன் குமரனின் குடும்பத்தைப் பற்றி கேட்டான். பிறகு இருவரும் ஒருவர் தோளில் மற்றொருவர் கையை போட்டுகொண்டு குமரனின் வீட்டிற்குள் சென்றனர்…
ஆசானின் வீட்டுவாசலில் மர்ம உருவம்…
அதே நேரத்தில், குமரனின் ஆசான் கந்தனின் வீட்டில் ஒரு கருப்பு குதிரை நின்றது! அதை ஓட்டி வந்தவன் அதனிடம் கத்தவேண்டாம் என சமிங்ஜை செய்தான். சுற்று முற்றும் பார்த்த அவன் ஆசானின் வீடு கதவை திறக்க முயல. அது திறந்தே இருப்பதை கண்டு மகிழ்ந்து வேகமாக உள்ளே சென்று கதவை தாளிட்டான்…

மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
உங்கள் மதன் !
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.