அசுரனும் களத்தில்
அசுரனின் அல்லக்கை, அசுரனிடம் ” குதிரை வியாபாரியின் போட்டி அறிவிப்பையும், குமரனும் அவன் ஆசான் கந்தனும் அதற்காக மகிழ்ச்சியுடன் இருப்பதையும் விளக்கினான்”. அசுரன் கோபத்தில், “என்ன விலை கொடுத்தாவது குமரனின் முயற்சிகளை தடுக்க வேண்டும், தேவைப்பட்டால் நானே அவனுக்கு எதிராக களத்தில் குதிப்பேன்..!” என்று கண்கள் சிவக்க உறுதியுடன் உறுமினான்…

அசுரன் குதிரை ஏற்றத்தில் சிறந்த பயிற்சி உடையவன். அவனே சொந்தமாக 5 குதிரைகள் வைத்திருந்தான். குமரனை குதிரை ஏறும் போட்டியில் மண்ணை கவ்வச்செய்ய வேண்டும் என்பதில் அவன் உறுதியோடிருந்தான்.
குமரன் வீட்டில் பாசப்போராட்டம்
குமரனின் வீட்டில், குமரனின் தாய் தாமரை, தன் மகன் குமரனின் நிலைமை குறித்து கவலைப்பட்டு தன் மாமியார் செங்கமலத்திடம் தன் துயரத்தை பகிர்ந்தாள், “அத்தே, குமரனை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு. பூபதி மற்றும் அவனோட பையன் அசுரனை எதுத்து நம்மளால போராட முடியுமா. வலிய போய் ஆபத்தை விலைக்கு வாங்கணுமா..?”. செங்கமலம் தாமரையை பாசத்துடன் பார்த்து, “பயப்படாத தாமரை எல்லாம் நல்லபடியா நடக்கும். கடவுள் நமக்கு துணை இருப்பார்..!” என்று ஆறுதல் கூறினாள். தாமரையும் ஒருவாறு சமாதானமடைந்தாள்.
ஞான சித்தரின் சித்து

அதே சமயம் அழகூருக்கு பல மைல்கள் அப்பால் இருந்த ஞானசித்தரின் ஜீவசமாதியில் சந்தன நறுமணம் எழும்பிற்று. அந்த நறுமணம் பின்பு தென்றலுடன் கலந்தது, அந்த அமானுஷ்ய தென்றல் சித்தரின் ஜீவா சமாதியை ஒரு வலம் வந்து பின்னர் வெளியில் வந்து, அருகிலிருந்த இருந்த நாகலிங்க மரத்திலிருந்து இரு மலர்களை கொய்து, அழகூரின் பத்மேஸ்வரரின் கோவிலை நோக்கி தன் பயணத்தை துவக்கியது.
சற்று நேரத்தில் அத்தென்றல் கோவிலை அடைந்து பின்னர் பத்மேஸ்வரரின் சன்னதிக்குள் சென்றது இரு நாகலிங்க மலர்களில் ஒன்றை பத்மேஸ்வரரின் மீது வைத்தது. மற்றொன்று மூன்று முறை பத்மேஸ்வரரை வலம் வந்தது. இப்போது அத்தென்றல் கோவிலை விட்டு வெளிவந்து ஆசான் கந்தனின் வீட்டைநோக்கி பயணித்தது.
ஆசான் கந்தனின் வீட்டில் அவரும் குமரனும் பேசிக்கொண்டிருந்தனர். ஆசான் குமரனை குதிரை ஏற பயிற்சி பெற வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார். தீடீரென அவரும் குமரனும் இனிமையான தென்றலையும் ஒரு மயக்கும் சந்தன வாசத்தையும் உணர்ந்தனர். ஆசான் கந்தன் பரவசத்துடன் மஹாசிவராத்திரி அன்று செங்கதிர் ரத்தினம் பத்மேஸ்வரரின் மீது வைக்கப்படும்போதெல்லாம் இந்த நறுமணம் வீசும். ஞானசித்தர் தன் ஜீவசமாதியில் இருந்து வந்து பூஜை செய்வதாக மக்கள் சொல்வார்கள். பல ஆண்டுகள் கழித்து இன்று இந்த மணம் மீண்டும் வீசுகிறது என்று மகிழ்ச்சி மற்றும் பரவசத்தில் கண்கலங்கினார்,
சற்று நேரத்தில் அந்த மற்றொரு நாகலிங்க மலர் குமரனின் கையில் அழகாக வந்து விழுந்தது. குமரனின் கையில் மலர் விழுந்ததை கண்டு கந்தன், “குமரா, ஞான சித்தர் உன் முயற்சிக்கு ஆசீர்வதித்துள்ளார். நீ நிச்சயம் உன் முயற்சியில் வெற்றி பெறுவாய்,” என்று கூறி குமரனை அணைத்துக் கொண்டார்.
குமரன் நெகிழ்ச்சியுடன் கண் கலங்கி மானசீகமாக தன் தந்தை வீரன், தாத்தா கூத்தன், ஞானசித்தர் மற்றும் பத்மேஸ்வரரை வணங்கி தன் முயற்சில் துணைஇருக்குமாறு வேண்டினான்.
மணி மற்றும் ராஜா

குமரனின் செல்லப்பிராணிகள், நாய் மணி🐕 மற்றும் ஆடு ராஜா🐐, பாரிஜாதம் தெருவில் நடந்து செல்லும் போது அவளை கண்டு மகிழ்ச்சியுடன் அவள் பின் சென்றன. அவற்றுக்கு பாரிஜாதம் குமரனின் காதலி என தெரியும். வாயில்லா பிராணிகள் என்றாலும் அவை மிகவும் அறிவுகூர்மை கொண்டவை.
பாரிஜாதம் அவற்றை கண்டு மகிழ்ந்து, “குமரனின் முயற்சிகளுக்கு நீங்கள் துணை இருக்க வேண்டும் சரியா” என அவைகளிடம் கேட்க புரிந்தது போல அவையும் தலை ஆட்டின. உடனே பாரிஜாதம் அவைகளை அன்புடன் தடவி கொடுத்தாள்.
குமரன் வீட்டிற்கு திரும்பும் வழியில் இந்த அழகான காட்சியை கண்டு நெகிழ்ந்தான். அல்லக்கை அருகிலுள்ள புதரில் இருந்து இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்தான். குமரனின் கூர்ந்த கண்கள் அவனை கண்டுவிட்டன, அவன் கண்கள் சிவந்தன. குமரனின் நாய் மணியும் அல்லக்கையை கவனித்து விட்டது தீடிரென அது தன்னை பாரிஜாதத்திடமிருந்து விடுவித்து கொண்டு அல்லக்கையை நோக்கி பாய்ந்தது….
மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
உங்கள் மதன் !
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.