1. கருப்பனின் வரவேற்பு
குமரன் மற்றும் கருப்பன் இருவரும், குமரனின் இல்லத்திற்குள் நுழைகின்றனர். குமரனின் தாய் தாமரை கருப்பனை மீண்டும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். “நீ என் இன்னொரு மகன் போல தான்,” என்ற தாமரையின் வார்த்தைகள் கருப்பனின் மனதை உருகச் செய்கின்றன. குமரனின் பாட்டி செங்கமலமும் விழித்தெழுந்து கருப்பனுக்கு ஆசி வழங்குகிறார். கருப்பனின் செல்லப்பிராணிகள் மணி மற்றும் ராஜாவும் அவனை வரவேற்கின்றன.
இரவு, கூடத்தில் அனைவரும் உட்கார்ந்து இரவுணவு சிறப்பாகத் தொடங்குகிறது. பல நாட்கள் கழித்து ஊர் திரும்பிய கருப்பனுக்காக தாமரை கோழி, மீன், வடை, பாயசம், அவியல், களி, பானகம், மோர் என பலவற்றை பரிமாறி திக்குமுக்காட வைக்கிறாள். குமரன் தன தாயை நினைத்து பெருமிதத்தில் ஆள்கிறான். கருப்பனோ தாய் இல்லாத தன் மேல அன்னையை போல பாசத்தை காட்டும் தாமரையை பார்த்து கண் கலங்குகிறான்.

2. கந்தன் ஆசானின் வீட்டில் ஆபத்து
இரவில், கந்தன் ஆசானின் வீட்டில் அந்நியன் ஒருவன் மெல்ல நுழைகிறான். எந்த சத்தமும் ஏற்படுத்தாமல், ஆசான் படுத்திருக்கும் இடத்திற்குச் செல்கிறான். அவன் முகத்தில் ஒரு குரூர சிரிப்பு பரவுகிறது. ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு, கந்தனை மூச்சுத்திணறச் செய்ய திட்டமிடுகிறான்.
3. குமரன்-கருப்பனின் இரவுக் கலந்துரையாடல்
இரவுணவுக்கு பிறகு, குமரன் மற்றும் கருப்பன் இரவில் அமைதியாக அமர்ந்து பேசுகின்றனர். மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில், இருவரும் மகிழ்ச்சியாக அணைத்துக் கொள்கிறார்கள்.
குமரன் கடந்த நாட்களில் சந்தித்த சோதனைகள், தனது பாட்டியின் வாயிலாக அறிந்த குடும்ப வரலாறு, பூர்வீக புத்தகம் மற்றும் அசுரனின் தந்தை பூபதியின் கொடூர நடவடிக்கைகள் குறித்து கருப்பனிடம் பகிர்கிறான்.
கருப்பன், குமரனின் கதையைக் கேட்டதும் திகைத்து, குமரனுக்கு உதவ உறுதி செய்கிறான். “நாம் அசுரனுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்,” என்று உறுதி கூறி குமரனுக்கு ஆறுதல் கூறுகிறான்.

4. பாரிஜாதத்தின் தீர்மானம்
பாரிஜாதம் தனது இரவுணவை முடித்துவிட்டு, குமரனை நினைக்கிறாள். குமரனின் உடல் மற்றும் மன வலிமையால்அவள் மெய்மறந்து போகிறாள். அவனுக்கு தன்னால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்று முடிவு செய்கிறாள்.
குமரன் முன்பு கூறிய பழமையான புத்தகத்தில், அவனது தாத்தா “பொன்னாங்கண்ணி” என்ற மூலிகை பற்றி குறிப்பிட்டிருந்ததை நினைவு கூர்ந்து, அதில் ஒரு ரகசியம் இருக்குமோ என நினைத்து அந்த புதிரை அவிழ்க்க முடிவு செய்கிறாள்.
5. கந்தனின் திடீர் தாக்குதல்
கந்தனின் முகத்தை தலையணையின் மூலம் மூச்சுத்திணறச் செய்ய முயற்சிக்கும் அந்த மர்ம நபர், தீடீரென கந்தன் உதைத்ததால் கீழே விழுகிறான்.
கந்தன் எழுந்து விளக்கை ஏற்றி, சற்றும் ஆச்சரியமின்றி, அவனை பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் கந்தனின் பலத்தை கண்டு வியப்படைந்த அந்த அந்நியன் தன இடுப்பிலிருக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு கந்தனை நோக்கி பாய்கிறான்.
மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
உங்கள் மதன்!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.