கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கரூர் காரங்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா. அனைவரும் மாரியம்மன் கோவில் திருவிழானா கரூர்ல ப்ரசண்ட் ஆகிருவாங்க..! இந்தத் திருவிழா மே மாசம் மூணாவது வாரத்துல வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் நடைபெறும். திருவிழாவிற்கு 15 நாளைக்கு முன்னாடி கம்பம் நடுவாங்க , கம்பம் நட்ட நாளிலிருந்து சாரை சாரையாக கம்பத்துக்கு தீர்த்து குடமும்; பால் குடமும் எடுத்துட்டு கிளம்பிடுவோம்.
பூத்தட்டு மற்றும் வேண்டுதல்…
அடுத்த ஒரு வாரத்துல ஒவ்வொரு ஏரியாவுலையும் இருந்து அவங்களோட சிறப்ப காட்டுற விதமா பூத்தட்டு கொண்டு வருவாங்க. பூத்தட்டுனா சும்மா ஒன்னு, ரெண்டு கிடையாது நாற்பதில் இருந்து 45 பூத்தட்டு இரவு ஏழு எட்டு மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலைல ரெண்டு, மூணு மணி வரைக்கும் கொண்டு வருவோம். இவ்வளவு பூத்தட்டுக்களும் விதவிதமான பறை இசையும் பேண்டு; டிரம்ஸ்னு கலந்து சும்மா தெறிக்க வச்சுகிட்டு இருப்போம். அதுக்கு முன்னாடி நம்ம பசங்க போடுற ஆட்டத்துக்கு இல்லையே ஒரு எண்டு…!
திருவிழா வந்ததும் வெள்ளிக்கிழமை அதாவது முதல் நாள் எல்லாரும் கோயிலுக்கு போறதும்; மாவிளக்கு படைக்கிறது அவங்களோட வழக்கத்தை முடிச்சிட்டு; அக்கினி சட்டி; அலகு குத்துறது அலகுன்னா சின்னதெல்லாம் இல்லை 10 அடி 16 அடிக்கு பெரிய அழகு, அதுல்லாம இப்ப புதுசு புதுசா ஏரோபிளேன், ஹெலிகாப்டர் அலகுனு மக்களோட வேண்டுதல் தங்களோட உடலை வருத்தி அம்மன் தங்களுக்கு செஞ்ச நல்லதை மட்டும் மனசுல நிறுத்தி அம்மனுக்காக எதையும் செய்ய தயாராகிறாங்க.
வானவேடிக்கை…
இரண்டாம் நாள்-நைட் ஒயிலாட்டம், கரகாட்டம்னு மக்களே ஆடி மாவிளக்கோட அம்மன சந்திக்கிறார்கள்.மூன்றாம் நாள்-கம்பம் எடுத்துவிட்டு ஆத்துக்கு போற நாள் என்ன எல்லா வீட்டுலயும் சிக்கன்; மட்டன்; மீனு நான்வெஜ் எடுத்து சிறப்பாக சமைச்சு நல்லா ஒரு புடி புடிச்சுட்டு கம்பத்தை பார்க்க கிளம்பிடுவாங்க…! வழிநெடுக அலையென மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து கம்பம் அமராவதி ஆத்த நோக்கி போக மக்களெல்லாம் கண் குளிர பார்ப்பாங்க…!! கம்பம் ஆத்துல இறங்குனா போதும் உடனே வான வேடிக்கை ஸ்டார்ட் ஆகுது வானவேடிக்கைனா கொஞ்சம் நஞ்சம் இல்லை நம்ம இதுவரைக்கும் பார்த்திராத பல வெடிகளையும், கலர் கலரான பட்டாசுகளையும், அது வானத்தில் போய் வெடிக்கிற அழகும் பூ…பூவா அப்படியே பிரிஞ்சி கொடைமாறி தெரிகிறதே இங்க மட்டும் தான் பார்க்க முடியும்.
கடைவீதி…
இதெல்லாம் போக ஆத்துல போடுற கடைகள் வழி நெடுக பரவி கிடக்கிறதும்; ராட்டினமும் தான் கரூர் திருவிழாவோட ஹைலைட் கடைகள்னா ஒன்னு, ரெண்டு இல்ல “செருப்பு கடை, பொட்டு கடை, தோடு கடை, பொம்மை கடை, இரும்பு கடை, மரக்கடை , கரம் கடை, பானி பூரி கடை, டெல்லி அப்பள கடை இன்னும் என்னென்ன கடை எல்லாம் இருக்கோ எல்லா கடையும் போட்டு இருப்பாங்க…” விலையும் சீப்பா இருக்கும் பொருளும் தரமா இருக்கும். ராட்டினம் மேல சின்ன வயசுல இருந்தே எல்லாத்துக்கும் ஒரு ஆசை இருக்கும். சொந்த பந்தங்களோட சுத்துறதுனா ரொம்ப பிடிக்கும்.
ஆனா இந்த கரூர் திருவிழா ஏன் ஸ்பெஷல் என்றால் இங்கேதான் எல்லா பெரிய ராட்டினமும் போடுவாங்க; கப் & சாசர்னு சொல்ற பிரேக் டான்ஸ்; கொலம்பஸ் (கப்பல் மாறி மேலேயும் கீழேயும் போயிட்டு வருமே அதுதான்); பெரிய பெரிய ராட்டினங்களை கொண்டு வந்த ஒரே திருவிழா அது எங்க கரூர் திருவிழா தான். நாங்க எல்லாம் இந்த ஒண்டர்லா (Wonderla), பிளாக் தண்டர் (Black Thunder) என்று போறதுக்கு முன்னாடியே இந்த ராட்டினம் எல்லாம் போனதுக்கு காரணமும் இந்த திருவிழா தான். கம்பம் ஆத்துல இறங்குற நாள்; திருவிழா முடிகிற நாள்; வான வேடிக்கை சொந்த பந்தங்களோடு சேர்ந்து ஏதாவது தீனியை சாப்பிட்டுக்கிட்டு கதை பேசி மகிழ்ந்திட்டு திருவிழாவையும் முடிச்சு இனி அடுத்த வருஷம் திருவிழா எப்படா வரும்னு காத்திருக்க ஆரம்பிச்சோம்…!!!
எங்கள் தனித்துவமான வாட்ஸ்அப் சேனலில் இணைந்து எங்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளும் சிறப்பு சலுகைகளும் உங்களுக்காக காத்திருக்கின்றன. எங்கள் வளரும் சமூகத்தின் ஒரு பகுதியாக இப்பொழுதே சேருங்கள்!

https://whatsapp.com/channel/0029Vab3zjcGufInexCDBx2O
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.