தாமரை, செங்கமலத்தை பார்த்து, “ரகசியத்தை குமாரனிடம் சொல்லிடீங்களா?” என்று கோபத்துடன் கேட்கிறாள், கண்கலங்கி, “அத்தை, நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க? இப்போ நம்ம குமரன் இந்த ரகசியத்தை எதுக்கு தெரிஞ்சுக்கணும்?” என்று கேட்கிறாள்.

செங்கமலம் கண்ணீருடன், தாமரையிடம், “தாமரை! பத்மேஸ்வரரே தன் ரத்தினத்தை மீட்க, உன் மகனை தேர்ந்தெடுத்திருக்கிறார். உன் கணவனின் ஆன்ம சாந்தி அடைய வேண்டாமா? குமரன் இந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கவேண்டிய காலம் வந்திடுச்சிமா,” என்று தாமரையை சமாதானப்படுத்துகிறார்.
குமரன் தன் அம்மாவிடம், “அம்மா, நான் உன்னிடம் ஒரு வாக்குறுதியை தருகிறேன். இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி, தந்தையின் லட்சியத்தையும் உன் சுய மரியாதையையும் மீட்டுத் தருவேன்,” என்று உறுதியுடன் சொல்கிறான். தாமரை அவனை நெகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்கிறாள். தாமரை பழைய சம்பவங்களை நினைத்து அழுகிறாள். குமரனும் செங்கமலமும் அவளை தேற்றுகின்றனர்.
ஜன்னலோரத்தில், அசுரனின் வலதுகை அல்லக்கை, குமரன் மற்றும் தாமரையின் உரையாடலை ஓரளவுக்கு மட்டும் கேட்டு, அசுரனிடம் சொல்ல ஓடுகிறான்.
ஆசான் கந்தனிடம்….

தாமரை, “குமரா, உன் ஆசான் கந்தனிடம் போய், மற்ற பகுதிகள் பற்றி விவரமாகக் கேள். அவர் உன்னிடம் செங்கதிரின் ரகசியம் பற்றி கூடுதலாக சொல்லத்தக்க விஷயங்கள் இருக்கலாம்,” என்று அறிவுறுத்துகிறாள்.
குமரன் தன் ஆசான் கந்தனை பயிற்சி களத்தில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெறுகிறான். தான் கண்டெடுத்த புத்தகத்தில் காணப்பட்ட வரைபடத்தின் ஒரு பகுதியைப் பற்றி விவரிக்கிறான். கந்தன் கண்களில் கண்ணீர் வந்து, தன் பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.
“குமரா, உன் தந்தை வீரன் என்னுடன் மிக நெருக்கமாக இருந்தான். நாங்கள் ஈருடல் ஓருயிராக இருந்தோம். அவனை மாதிரி ஒரு வீரனை நான் இன்றுவரை பார்க்கவில்லை. துரோகத்தால், பூபதி அவனையும் உன் தாத்தா கூத்தரையும் கொன்றதை நினைக்கும் போது எனக்கு இன்னும் மனது வலிக்கின்றது,” என்று சொல்லி கந்தன் கண்கலங்கினார்.
குமரன், தன் ஆசானை இவ்வளவு மனமுடைந்து பார்த்ததே இல்லை, வருத்தத்துடன் அவரை பார்த்தபடியே நின்றான்.
கந்தன் தன் வாழ்நாளில் இப்படியொரு நாளுக்காகக் காத்திருந்ததைப் பற்றி கூறுகிறான். “நான் என் வாழ்க்கையை உன் குடும்பத்துக்காக, உன் தந்தை, தாத்தாவின் லட்சியத்துக்காக தியாகம் செய்ய தயார். உன் அம்மா, நீ ஆபத்தில் சிக்கி கொள்வாயோ என உன்னிடமிருந்து ரகசியத்தை மறைத்து என்னையும் உன் பாட்டியையும் கூட உண்மையை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டார். ஆனால் இப்போது சிவனே உன்னை இப்பணிக்கு தேர்வு செய்துள்ளார். இனி எல்லாம் ஜெயமே,” என்று சொல்லி குமரனை கந்தன் தழுவி கொள்கிறார்.
குமரன் தன் ஆசானின் தியாக உணர்வை பார்த்து அதிர்ச்சியடைந்து, தன் பயணத்தை முன்னெடுப்பதற்கு மேலும் உறுதியானவனாகின்றான்.
—
கந்தன் மேலும் தொடர்கிறார், “குமரா, உன் தாத்தா கூத்தன் மிகவும் கூர்மையானவர், நாட்டுப்புற கவி பாடுவதில் வல்லவர். அவர் வரைபடத்தின் இன்னொரு பகுதிக்கான குறியீடுகளை தன் பாடல்களில் மறைத்திருப்பார். அவரின் பாடல்களில் மறைந்திருக்கும் செய்தியை நாம் கண்டுபிடிக்க வேண்டும், அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தாலே, நாம் செங்கதிர் ரத்தினத்தை அடைந்துவிடலாம் “.
குமரன் தன் ஆசானின் வழிகாட்டலை ஏற்று, தன் வீட்டிற்கு திரும்பி, அப்புத்தகத்தை படிக்க முடிவு செய்கிறான். அதற்கு முன் தன் காதலியான பரிஜாதத்தை சந்திக்க முடிவெடுக்கிறான். பத்மேஸ்வரர் சன்னதியில் எறிந்த விளக்கு சற்று பிரகாசமாக எரிய துவங்கியிருந்தது

கதை சுவாரஸ்யத்துடன் நகர்கிறது என நினைக்கிறன். மீண்டும் அடுத்த பரபரப்பான அத்தியாயத்தில் சந்திப்போம்.
அன்புடன் மதன்.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.