குமரன் ஒரு பழைய புத்தகத்தை கண்டுபிடித்து, அதை தனது பாட்டி செங்கமலத்திடம் கொண்டு சென்றான். செங்கமலம் புத்தகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
“குமரா, நீ இந்தப் புத்தகத்தை எப்படி கண்டுபிடிச்ச?” என்று அவர் கேட்டார்.
“பாட்டி, இதுலே நம்ம குடும்ப ரகசியம் ஒளிஞ்சிருக்கா? எதோ பெரிய ரகசியம்னு தோணுது. நீ எனக்கு விவரமாக சொல்லணும்,” என்றான் குமரன்.
செங்கமலம் தன் மகள் தாமரை அருகில் இல்லாததை உறுதி செய்த பிறகு, குமரனுக்கு குடும்பத்தின் ரகசியத்தைத் தெரியப்படுத்த தயாராகினாள்.
“குமரா, இதை உனக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. இதை நான் மரணிக்குமுன்னே உனக்குச் சொல்லணும்னு நினைச்சேன்,” என்று கண்கலங்கிய செங்கமலம் தொடங்கினாள்.
ஞானசித்தரின்வருகை:
“16-ஆம் நூற்றாண்டில், ஞானசித்தர், நம் கிராமமான அழகூர் பக்கமாக வந்தார். சக்திவாய்ந்த சித்தரான அவர் அழகூர் கிராமத்தில் 48 நாட்கள் தங்கி, பத்மேஸ்வரருக்கு விசேஷ பூஜைகள் செய்தார். அப்போது மகா சிவராத்திரி சமயம்.
மகாசிவராத்திரி பண்டிகையின் முன்பாக, கிராமத்தில் பஞ்சமும் நோய்களும் பரவி இருந்தன. அப்போது, நம் முன்னோர், கிராமத்தின் தலைவராக இருந்தார், அவர், சித்தரிடம் உதவி கேட்டார்.
சித்தர் தன் பையிலிருந்த செங்கதிர் ரத்தினத்தை எடுத்துப் பூஜை செய்து, அதை பத்மேஸ்வரர் சிவலிங்கத்தில் வைத்து, ‘இந்த ரத்தினம் கிராமத்திற்கு நல்ல பாக்கியத்தை கொடுக்கும், நோய்களை குணமாக்கும் சக்தி கொண்டது’ என்றார். அந்த இரவில் மழை பெய்து, சில நாட்களில் கிராமம் நீரால் நிரம்பி, நோய்கள் மறைந்தன.”

பாரம்பரியத்தின்தொடர்ச்சி:
“சித்தர் கிராமத்தை விட்டு செல்லும்போது, செங்கதிர் ரத்தினத்தை நம் முன்னோரிடம் ஒப்படைத்து, ஒவ்வொரு மகாசிவராத்திரியிலும் சிவலிங்கத்திற்கு அலங்கரிக்க வேண்டும், பிற நாட்களில் ரத்தினத்தை பாதுகாப்பாக பெட்டியில் வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த வழிமுறை 150 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டது. நம் கிராமமும் வளமும் நலமும் பெற்று செழித்து இருந்தது”.

துரோகத்தின்தோற்றம்
“உன் தந்தையும் என் ஆசை மகனுமான, வீரனின் காலத்தில், கருப்பனின் தந்தை பூபதி, உன் தாத்தா கூத்தனிடம் இருந்து செங்கதிர் ரத்தினத்தை திருட முடிவு செய்தான். அவர் தங்க நாணயங்களைப் பெறுவதற்காக, நெதர்லாந்து கிழக்கு இந்தியா கம்பெனி அதிகாரியிடம் அதை விற்க நினைத்தான். அவனது சதி திட்டத்திற்கு உன் தந்தையும் தாத்தாவும் முட்டுக்கட்டை போட்டனர்“.
வீரனின்தைரியம்
ஒரு இரவு, பூபதி உன் தாத்தாவை காயப்படுத்தி, ரத்தினத்தை திருடினான். உன் தந்தை வீரன் இதைப் பற்றி அறிந்து, பூபதியை குதிரையில் துரத்தி சென்று போராடி, ரத்தினத்தை மீட்டான். ஆனால், பூபதி வெகுண்டு, வீரனின் பின்புறத்தில் குத்தினான்.
படுகாயமடைந்த வீரன் இறக்கும் முன், அவனது நண்பன் கந்தனிடம் உனக்கு போர்கலைகளையும் வீரத்தையும் போதிக்கவும் மற்றும் குடும்பத்தை பூபதியிடமிருந்து பாதுகாக்கவும் வாக்கு பெற்றான். அப்போது நீ பிறந்த புதிது, உன் தாய் உன்னுடன் அவளின் அம்மா வீட்டில் தங்கியிருந்தாள்
உன் தாத்தா கூத்தன், செங்கதிர் ரத்தினத்தை மறைத்து, அதற்கான வரைபடத்தை தயாரித்தார். அதில் பாதி வரைபடத்தை புத்தகத்தில் வைத்து விட்டு மீதி பாதியை யாருக்கும் தெரியாத இடத்தில சில புதிர்களை போட்டு மறைத்து வைத்தார். உன் தாத்தாவை மிரட்டி பார்த்த பூபதி ஒரு நாள் அவரை கொன்று விட்டான்.
மௌனத்தின்குரல்:
குமரா நீ இப்போது வரைபடத்தின் ஒரு பாதியை ஈசன் அருளால் கண்டுபிடித்து விட்டாய் அதன் மறு பாதியை கண்டுபித்து செங்கதிர் ரத்தினத்தை மீட்டால் தான் உன் தந்தை மற்றும் தாத்தா ஆன்ம சாந்தி அடைவார்கள், அதனால் மறைந்திருக்கும் மற்ற பகுதியைத் தேட வேண்டும். ஆனால் உன் அம்மா உன் உயிருக்கு பயந்து, உனக்கு இந்த ரகசியம் தெரியாமல் வளர்த்து விட்டாள்.
செங்கமலம் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, தாமரையின் அடிச்சுவடிகளை கேட்டுவிட்டு, மௌனமாகிவிட்டார்.
தாமரை வந்து, “அம்மா, என்ன பேசிகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
குமரன் வேகமாக புத்தகத்தை மறைத்து வைத்தான்.
செங்கமலத்தின் வெளிறிய முகத்தையும் குமரனின் கலங்கிய கண்களையும் கண்ட தாமரை தான் இத்தனை நாளாக காத்து வந்த ரகசியம் வெளிப்பட்டு விட்டதோ என பயந்தாள்.
—
இதுவரை கதையின் திருப்பங்கள் மற்றும் ரகசியங்கள் உங்களைத் திகைக்கவைத்திருக்கின்றன என நம்புகிறேன். மீண்டும் அடுத்த பரபரப்பான அத்தியாயத்தில் சந்திப்போம்.
அன்புடன் மதன்.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.