[:en]
83 உலகக்கோப்பை வெற்றி ஒரு சச்சினை உருவாக்கியதைப் போல, சச்சினின் எழுச்சி ஒரு தோனி – ஹோலியை உருவாக்கியதைப் போல, தோனியைப் பார்த்து உருவான ஒரு தலைமுறை களத்துக்கு வருவதற்கு முன்பு ஏற்பட்ட இடைவெளியில் இந்திய கிரிக்கெட் சுணங்கிக்கிடந்த காலம்.
2007ல் T20 உலகக்கோப்பை, 2009ல் டெஸ்ட் தரவரிசையில் வரலாற்றிலேயே முதல்முறையாக முதலிடம், 2011ல் உலகக்கோப்பை,
2013ல் சாம்பின்ஸ் ட்ரோபி என சகலத்தையும் வென்று முடித்திருந்த இந்திய அணிக்கு இலக்கு என்றும், உத்வேகம் என்றும், கட்டாயம் என்றும் அன்று எதுவும் மிச்சமிருக்கவில்லை.
ஆனால், அடுத்தடுத்த பெருவெற்றிகளால் திடீரென வீறுகொண்டு எழுந்த ஒரு பெருமிதத்தை, கண்ணுக்கு முன்னால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றை காப்பாற்றியாக வேண்டிய கடும் நெருக்கடி மிச்சமிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல; ஆஸ்திரேலியாவுக்கும் இதே Generational issue எழுந்தது. அசகாய சூரனான பாண்டிங்கின் தலைமை முடிந்த பிறகு, அணித்தலைமை யார்?
பொட்டிக்கடையில் சிக்லெட்டை வாங்கி பேக்கெட்டுக்குள் திணித்துக்கொள்வதுபோல, உலகக்கோப்பைகளை வாரிச்சுருட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் வீரியமிக்க வரலாற்றை எடுத்துச்செல்லப்போவது யார் என்ற சிக்கல் எழுந்த போது, தலைமைக்கு வந்த வீரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியே மிக மோசமான குலைவைச் சந்தித்தது.
இந்திய கிரிக்கெட் அப்படி ஒரு குலைவைச் சந்திக்கவில்லை.
அதற்கு ஒரு காரணம் தோனி மிக சமயோசிதமாக முடிவெடுத்து அணித்தலைமையை கைமாற்றி, அதே அணியில் ஒரு சாதாரண வீரனாகவும் நீடித்து புதிய தலைமையை வலுப்படுத்தியது.
பாண்டிங், கங்குலி, ஸ்டீவ் வாக், க்ரீன் ஸ்மித் என யாரும் செய்யாத ஒரு கேப்டன்ஷிப் மகத்துவம் அது.
ஆனால், அந்த குலைவின்மையைத் தடுத்து நிறுத்திய மாபெரும் கரம் ஹோலி.
ஹோலியால் கோப்பைகளை குவிக்க முடியவில்லை. நிச்சயம் அவர் தோனி அல்ல. ஆனால், ஹோலி ஒருவகையில் கங்குலி.
கங்குலி கோப்பைகளைக் குவிக்காதவர். ஆனால், அணி வழிநடத்தும் ஆற்றல்மிக்க ஒரு தனிநபர் கங்குலி. சூதாட்ட புகார்களால் முடங்கிக்கிடந்த இந்திய அணியை தூசிதட்டி மேலே கொண்டு வந்தது வரலாற்றுக் கரையின் ஒருபுறம் என்றால், வெற்றி போதையில் நகர முடியாமல் நின்றிருந்த இந்திய அணியை மூழ்கி சாகாமல் ஹோலி நகர்த்திக் கொண்டுவந்தது வரலாற்றுக் கரையின் மறுபுறம்.
ஆனால், ஒரு வித்யாசம். கங்குலியின் காலத்தில் ஒரு பொது உத்வேகம் இருந்தது. சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம். பட்ட அவமானங்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்கிற உத்வேகம். அந்த பொது உத்வேகம், ஆக்ரோஷமிக்க கங்குலியின் சொல்லுக்கு கீழே ஒரு அணியைக் கட்டியெழுப்பியது.
ஆனால், எந்த உத்வேகமும் இல்லாத ஒரு காலத்தில் அணியைக் காப்பாற்றும் காபந்து கேப்டன் பணிதான் ஹோலிக்கு கிடைத்தது.
என் பார்வையில் ஹோலி, கேப்டனுக்கான மெட்டீரியல் அல்ல. ஆனால், அவரைத்தவிர, அவர் காலத்தில், அவருக்கு நிகரான ஒரு வீரன் அந்த பொறுப்புக்கு இல்லை என்பதே முகத்தில் அறைந்தார் போல இருக்கும் உண்மை.
2007 T20 உலகக்கோப்பை தொடரிலிருந்தே அணியிலிருக்கும் ரோஹித், 2022ல் தான் அணித்தலைமைக்கு தயாராகியிருக்கிறார் என்ற ஒரு உண்மை போதும், ஹோலி எத்தகையைவர் என்பதைச் சொல்ல.
ஐ.பி.எல் அணித்தலைமைகளாக உருவெடுத்த பல வீரர்கள் ஆடும் ஒரு அணியை, உத்வேகமற்று நின்றுகொண்டிருந்த ஒரு அணியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல.
கேப்டன்களாக உயரும் எவரும் Personal performance-ல் சுணங்குவார்கள். கேப்டன் பொறுப்பில் அதுவும் அடக்கம்.
ஆனால், கேப்டன்ஷிப்புக்கு வந்த பிறகும் ஹோலியின் ஆட்டம் என்பது ‘இந்தா வாங்ய்க்கோ…வாங்ய்க்கோ’ ரகம் தான்.
கேப்டன்ஷிப்புக்கு வந்தபிறகும் அவர் உலகின் தலைசிறந்த வீரராகவே நீடித்தார். அந்த நீடிப்பே அவரை அணியை நீட்டிக்கவும் உதவியது.
ஹோலியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் வெற்றிகள் இன்றைய உலகில், Characterstical leadership quality theorykaகளில் வைக்க வேண்டிய முக்கிய பாடம்.
ஆக்ரோஷமும், ஆர்ப்பரிப்புமே இயல்பாகக் கொண்ட ஹோலி, நுணுக்கமும் விரைவும் தேவைப்படும் ODI, T20 கேப்டனிஷிப்புகளில் சோபிக்கவில்லை. ஆனால், 5 நாள் ஆட்டத்தில், தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான Continuous evolutional processல் அபாரமான சாதனைகளைச் செய்துள்ளார்.
உண்மையில், ஹோலிக்கு தேவைப்பட்டது, டெஸ்ட் கிரிக்கெட்டின் நிதர்சனம் தரும் பொறுமையான சூழல். அந்த சூழல் கிடைத்தபோது அவர் தலைமை வென்றிருக்கிறது.
அரசியல் விளையாட்டுக்கும், விளையாட்டு அரசியலுக்கும் இடையே ஒரு சாதனைத் தலைமையாக உயர தன்னை அதக்கிக்கொண்டு, அணியை வெல்லும் ஆளுமை வேண்டும்.
உண்மையில், அது ஒரு சுய சூதாட்டம். ஹோலிக்கு அது கைகூடவில்லை. பலகீனமான ரவி சாஸ்திரியை வைத்து அவர் வீசிய கார்டுகள் அச்சூதாட்டத்திற்கு போதவில்லை.
இன்றைக்கு இந்திய கிரிக்கெட் நேரடியாக சில லட்சம் கோடி புரளும் மிகப்பெரும் வணிகம். அந்த வணிகத்தை சூறையாட பேராதிகாரம் நாக்கில் எச்சில் வடிய உக்காந்திருக்கிறது. அந்த இரை பயணிக்கும் திசையில் செல்ல எவர் வந்தாலும் அவர் ரத்தத்தையும் அப்பேரதிகாரம் ருசிபார்க்கும்.
ஹோலியின் ரத்தம் ருசிபார்க்கப்பட்டிருக்கிறது.
சுரணைமிக்க ரசிகபட்டாளம் இல்லாத இக்காலத்தில் நடக்கும் இந்த பலியாட்டம், அரசியல் அரங்கில் மட்டுமே வைத்து தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னை. அதிகாரம் மாறாமல் இவை எவற்றையும் மாற்ற முடியாது.
ஹோலி பொறுப்புக்கு வந்தபோது உருவாகியிருந்த Generational issue, ஹோலி விலகும்போது கிட்டத்தட்ட முடிந்திருக்கிறது. இன்று அணியில் இருக்கும் அனைவரும் தோனி யுகத்திலிருந்து எழுந்து வந்தவர்கள். அவர்களுக்கென்று ஒரு இலக்கும் கனவும் இருக்கிறது.
அரசியல் சூதாட்டத்தால், அக்கனவு சிதையாமல் காக்க வேண்டியது மட்டும் தான் நம்முடைய பொறுப்பு.
கேப்டனிஷ்ப் விவகாரத்தில், ஹோலிக்கு நிகழ்ந்திருக்கும் அவமானம் ஹோலியின் தோல்வி அல்ல. இந்திய கிரிக்கெட்டின் தோல்வி.
ஒரு சச்சினை தோனியாக மாற்றும் அவசரத்தில், கிரிக்கெட் வியாபாரம் விலைசூது ஆன பரிதாபத்தின் தோல்வி.
மன்னியுங்கள் ஹோலி !!!
[:]
Share this:
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
Related
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.